பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( Pattukottai Kalyanasundaram ) (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 08, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (தோற்றம்-13.04.1930 மறைவு- 8.10.1959)
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு மகனாக எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கல்யாணசுந்தரம்திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1954ஆம் ஆண்டு "படித்த பெண்" திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றினார்.
தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். கல்யாணசுந்தரம் அவர்கள். இளம் பிராயத்திலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டவர். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டவர்